தமிழ்நாடு

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை

webteam

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பருவமழை பற்றாக்குறை குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்தியாவில் உள்ள 40 சதவிகித மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உள்ள 125 மாவட்டங்களில் 56 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறையாக பெய்திருக்கிறது. 

தென்னிந்தியாவில் பருவமழை பற்றாக்குறையால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழகம் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியின் 4 மாவட்டங்களிலுமே பருவமழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களிலும், கர்நாடகத்தின் 14 மாவட்டங்களிலும் பருவமழை பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. 

ஆனால் கேரளாவில் மட்டும் 10 மாவட்டங்களில் மிக அதிகளவில் பருவமழை பெய்துள்ளது. அதே போல மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, தென்னிந்தியாவில் உள்ள 31 பிரதான நீர்த்தேக்கங்களிலும் 76 சதவிகிதம் நீர் இருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் உள்ளன. சோழவரம் ஏரி ஆயிரத்து 81 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி, சோழவரம் ஏரியில் 1 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 13 மில்லியன் கன அடி நீர் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3ஆயிரத்து 645 மில்லியன் கன அடியாக இருக்கும் நிலையில் தற்போது 467 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 753 மில்லியன் கன அடி நீர் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 4 ஏரிகளிலும் 10 சதவிகித நீர் மட்டுமே இருப்புள்ளது. ஆனால் பிற குடிநீர் ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.