பருவமழை தொடங்க உள்ளதால் சேதமடைந்த கட்டடங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், தொடக்கக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஆகியோர் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் அனைத்து பள்ளிகளிலும் உள்ள கட்டடங்களின் உறுதியை சோதித்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அத்துடன் பாழடைந்த கட்டடங்களை அனுமதி பெற்று இடிக்க வேண்டும், சேதமடைந்த கட்டங்களில் வகுப்புகள் நடத்த வேண்டாம், கீழே விழும் நிலையில் மரங்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பள்ளி அருகில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனை, காவல் நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவற்றின் தொலைப்பேசி எண்களை பள்ளி வளாகத்தில் எழுதி வைக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.