வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்த குட்டியின் அசைவற்ற உடலை விடாமல் தூக்கிக்கொண்டு வருத்ததோடு தாய்க்குரங்கு அலையும் காட்சி காண்போரை நெகிழ வைப்பதாய் அமைந்துள்ளது.
தமிழக கேரள எல்லையை இணைக்கும் குமுளியில், வனங்கள் புடை சூழ தமிழக குமுளி பேருந்து நிலையம் உள்ளது. இந்த வனங்களில் இருந்து குரங்குகள் கூட்டம் கூட்டமாய் நகர் பகுதியின் கடைகளுக்கு உணவிற்காக வருவது வழக்கமாக இருந்து வருகிறது. தேனி- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பகுதி ஒருபுறமிருக்க, பேருந்து நிலைய பகுதி என்பது கூட மறந்து வாகனங்கள் அதிவேகத்தில் கடந்து செல்கின்றன. அந்தவகையில், சாலையை கடக்க முயன்ற குரங்கு குட்டி ஒன்று, வேகமாக சென்ற லாரியில் அடிபட்டு சற்று நேரத்தில் துடிதுடிக்க உயிரிழந்தது. அதை தூக்கிக்கொண்ட தாய்க்குரங்கு. தனது குட்டியை எழுப்பிப்பார்ப்பதும், அதற்கு தலை, உடல்களை கோதி விடுவதுமாக இருந்தது காண்போரை கலங்க வைத்தது.
பின்னர் இறந்த குட்டி குரங்கின் அசைவற்ற உடலை வாயில் கவ்வியவாறு தூக்கிச்சென்று வனத்திற்குள் மறைந்தது அந்த தாய்க்குரங்கு. கூடவே, அதன் உறவுக்கார குரங்கும் கூடவே இருந்து தனது சோகத்தை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. உறவுகளையும், உயிரையும் ஒரு நொடியில் தூக்கி எறியும் ஆறறிவு மனிதர்கள் மத்தியில் ஐந்தறிவு ஜீவனின் அன்பு அனைவரையும் நெகிழ வைப்பதாய் அமைந்தது.