வீட்டில் திருட்டு புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆவடி: வீட்டை பூட்டி சாவியை ஒளித்த உரிமையாளர்; திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

PT WEB

வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை கதவருகே ஒளித்துவைத்துவிட்டுச்
செல்வது எவ்வளவு தவறு என்பதை உணர்த்தும் வகையில் ஒரு திருட்டுச் சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த செந்தாமரை, அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதேபகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல, செயலி மூலம் ஆட்டோ அழைத்திருக்கிறார். செந்தாமரையை அழைத்துச் செல்ல பெண் ஆட்டோ ஓட்டுநரும் வந்துவிட்டார்.
அப்போது, வீட்டைப் பூட்டி கதவருகே சாவியை ஒளித்துவைத்துவிட்டு, செந்தாமரை புறப்பட்டார். காமராஜர் நகர் சென்ற அவர், மறுநாள் காலை வீடு திரும்பியபோது கதவு திறக்கப்பட்டு, வீட்டிலிருந்த ஒரு சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆவடி காவல்துறையினர்,
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது,
செந்தாமரையை அழைத்துச் சென்ற பெண் ஆட்டோ ஓட்டுநர், அவரை இறக்கிவிட்டுவிட்டு அதே வீட்டுக்கு திரும்பி வந்ததும், செந்தாமரை மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து, திருட்டுச்
சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.