நாட்டின் 75 ஆவது குடியரசு தினவிழாவில் கலை, சமூகப் பணி, பொதுசேவை, அறிவியல், பொறியியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அதன்கீழ் சென்னையில் நடைபெற்றுவரும் குடியரசு தினவிழாவில் Alt News எனப்படும் உண்மை சரிபார்ப்பு இணையதளத்தின் நிறுவனர் முகமது ஜுபைருக்கு, கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது.
இந்த விருது மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த கோட்டை அமீர் அவர்களின் பெயரால் உருவாக்கப்பட்டது. இதை முகமது ஜுபைருக்கு கொடுத்தது குறித்து தமிழக அரசு சார்பில், “சமூக ஊடகங்களில் வரும் செய்தியின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து உண்மையை வெளியிடுபவர் முகமது ஜுபைர்; பொய்யான செய்தியால் சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளை தடுக்க முகமது ஜுபைரின் பணி பெரும் உதவி செய்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது ஜுபைர்:
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பஞ்சாயத்துக்குட்பட்ட உருது பள்ளி தெருவை சேர்ந்தவர். தற்போது போலிச் செய்திகளை தடுக்கும் நோக்கில் இணையதளம் தொடங்கி, பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவிய காணொளி காட்சிகளின் உண்மைத்தன்மையை சரிபார்த்து, “இந்நிகழ்வு தமிழ்நாட்டில் நடைபெற்றது அல்ல” என தனது 'Alt News' இணையதளம் மூலம் உலகத்திற்கு தெரியப்படுத்தியவர் முகமது ஜுபைர். இதை தமிழ்நாடு அரசு இவரைப்பற்றிய தங்களின் குறிப்பில் தெரிவித்துள்ளது.
அக்குறிப்பில் மேலும் “இச்செய்தியை வெளியிட்டதன்மூலம் தமிழ்நாட்டில் மொழி, இனம், மதம், சாதி போன்றவற்றின் அடிப்படையிலான வன்முறைகள் தடுக்கப்பட்டன. இப்படியாக மதநல்லிணக்கத்தை பேண அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டும் நோக்கில் அவருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது வழங்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருது குறித்து நம்மிடையே பேசிய ஜூபைர், “இந்த விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி. இந்தியா மாதிரியான நிறைய போலி செய்திகள் வரும் ஒரு நாட்டில், அரசுகள் எங்களை போன்ற உண்மை சரிபார்ப்புக்குழுவின் வேலைகளை அங்கீகரிக்க தொடங்கியுள்ளன. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகின்றனர் என்ற செய்தி வெளியானபோது, அதை பொய்ச்செய்தி என நிரூபித்திருந்தோம். அந்த நிகழ்வை தமிழ்நாடு அரசு அங்கீகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
உண்மை சரிபார்ப்பை பொறுத்தவரை, சில செய்திகளுக்கு ஓரிரு மணிநேரத்தில் உண்மை தெரிந்துவிடும். ஆனால் சிலவற்றுக்கு ஓர் நாளே தேவைப்படும். இன்னும் பல உண்மை சரிபார்ப்பு நிறுவனங்கள், குழுக்கள் வரும்பொழுது இந்த நிலை சீரடையும் என எதிர்ப்பார்க்கிறேன். குடியரசு தினவிழாவில் விருதை பெறுவது, இன்னும் நெகிழ்ச்சி” என்றார்.