தமிழ்நாடு

நெரிசலை சமாளிக்க ஆதார் மையங்களின் செயல்பாடு மாற்றியமைப்பு

நெரிசலை சமாளிக்க ஆதார் மையங்களின் செயல்பாடு மாற்றியமைப்பு

webteam

சென்னையில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் நிலவும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், பொதுமக்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கவும் இம்மையங்களின் செயல்பாட்டு வழிமுறைகள் பிப்.13 முதல் மாற்றியமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 339 இடங்களில் 367 முகப்புகளுடன் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நிர்வகித்து வருகிறது. இம்மையங்களில் ஆதார் சேர்க்கைக்கு தேவையான படிவங்கள் கட்டணமின்றி வழங்கப்பட்டு பொதுமக்களின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

சென்னையில் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆதார் மையங்களை நிர்வகித்து வருகிறது. இம்மையங்களில் பொதுமக்களின் வருகை அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் ஏற்படுவதாகவும், கூட்டத்தை நெறிப்படுத்தவும், சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் அலுவலர்கள் இல்லை என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆதார் சேர்க்கை மையங்களின் செயல்பாட்டு வழிமுறைகள் வரும் பிப்.13 ஆம் தேதி முதல் மாற்றியமைக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், எழிலகம், சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகம், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆதார் சேர்க்கை மையங்கள் காலை 9.45 முதல் மாலை 5.45 வரை செயல்படும் எனவும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் உதவி மேஜைகள் அமைக்கப்பட்டு ஆதார் உதவி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“முதலில் வருபவர்களுக்கு முதல் சேவை” என்ற அடிப்படையில் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதார் பதிவிற்கு கட்டணம் ஏதும் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் உதவி அலுவலர்கள் பணிகளில் குறை இருந்தால் 1800 425 2911 என்ற எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.