மக்கள் நீதி மய்யத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றிபெறாதது வருத்தமளிக்கிறது. மகேந்திரன் முன்பே வாந்திருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்கும். தேர்தலை அறிவித்தபோதே மகேந்திரனை எதிர்ப்பார்த்தேன். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் உள்ளிட்டோர் கிடைத்திருக்கின்றனர்” என்றார்.
முன்னதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணைத்தலைவராக இருந்தவர் மகேந்திரன். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய நிலையில் இருந்தே அவருடன் பயணித்தார். பின்னர் சட்டமன்றத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை சந்தித்தது. அதில், கமல்ஹாசன், மகேந்திரனும் கூட தோல்வியை சந்தித்தனர்.
இதையடுத்து கட்சியில் ஜனநாயகம் இல்லை எனக்கூறி அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியிலிருந்து விலகினர். மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் பொன்ராஜ், சிகே குமரவேல், மௌரியா, சந்தோஷ்பாபு எனப் பலரும் கட்சியிலிருந்து விலகினர். குறிப்பாக, கட்சியில் கமலுக்கு அடுத்து முக்கியமான முகமாக அறியப்பட்ட அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரனும் விலகியது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.