திமுக முகநூல்
தமிழ்நாடு

பற்ற வைத்த ரஜினி... பற்றி எரியும் திமுக! அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து சொல்லவருவது என்ன?

ரஜினியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், “மூத்த அமைச்சர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்ட வேண்டும்” என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

PT WEB

செய்தியாளர்: ராஜ்குமார்

ரஜினியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில், “மூத்த அமைச்சர்கள் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து வழிகாட்ட வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. திமுகவில் சீனியர்களின் முக்கியத்துவத்தை குறைக்க உதயநிதி நினைக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நிர்வாகத் திறமையைப் புகழ்வதற்காக மூத்த அமைச்சர்களை ‘முதல் ரேங்க் வாங்கியும், வகுப்பை விட்டு வெளியேற மறுக்கும் ஓல்ட் ஸ்டூடன்ட்’ என குறிப்பிட்டு பேசினார். இது சர்ச்சையானது. இதனை அமைச்சர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்த நிலையில், ரஜினியின் கருத்தை வழிமொழியும் வகையில், “மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழி விட வேண்டம்” என்று அமைச்சரும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதற்கிடையே, “மூத்த நிர்வாகிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதையே நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்” என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார். அதேசமயம் வாரிசுகள் நலன் கருதியே திமுக செயல்பட்டு வருவதாகவும் அவர் விமர்சித்தார்.

அதிமுகவின் கே.பி.முனுசாமி மட்டுமின்றி, பாஜக-வில் தமிழிசை, நாதக-வில் சீமான் உள்ளிட்டோரும் திமுகவின் மூத்த அமைச்சர்கள் தொடர்பான விவகாரத்தில் கருத்திட்டுள்ளனர். “ரஜினியின் பேச்சு திமுகவில் புயலையும் சுனாமியையும் கிளப்பி இருக்கிறது” என தமிழிசை கூறியுள்ளார்.

ரஜினியும், துரைமுருகனும் சமாதானமாகிவிட்டாலும், ரஜினியின் கருத்தை வரவேற்று உதயநிதி பேசியிருப்பது திமுகவில் மாற்றத்திற்கான நேரம் தொடங்கிவிட்டதைக் காட்டுவதாக மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர்.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுகவில் ஐந்து அமைச்சர்கள் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் இடம்பெற்றுள்ள உதயநிதி சீனியர்கள் குறித்து பேசி இருப்பது, கட்சியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்திருப்பதாக கருதுகின்றனர், அரசியல் விமர்சகர்கள்.