தமிழ்நாடு

எம்.எல்.ஏக்கள் பயன்படுத்தாமல் வெறிச்சோடிப் போன குளிர்சாதனப் பேருந்து

எம்.எல்.ஏக்கள் பயன்படுத்தாமல் வெறிச்சோடிப் போன குளிர்சாதனப் பேருந்து

webteam

எம்.எல்.ஏ விடுதியிலிருந்து சட்டமன்றத்திற்குச் செல்லும் எம்.எல்.ஏக்களுக்கான பிரத்யேக குளிர்சாதனப் பேருந்து எம்.எல்.ஏக்கள் பயன்படுத்தாத காரணத்தால் காலியாக ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூடும் காலங்களில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதிகளில் இருந்து சட்டப்பேரவைக்கும், பின்னர் மீண்டும் சட்டப்பேரவையில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களின் விடுதிகளுக்கும் அரசு சார்பில் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதனை ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்களை தவிர்த்து மற்ற யாருமே பயன்படுத்துவதில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்காக இயக்கப்படும் டீலக்ஸ் பேருந்துகளுக்குப் பதிலாக, குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் விலை மதிப்பான இந்தப் பேருந்துகளையும் ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்துவதே அரிதாக இருக்கிறது. சில நேரங்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் உதவியாளர்கள் இந்தப் பேருந்துகளை பயன்படுத்தினாலும், அவர்களிலும் சிலர் மட்டுமே இந்தப் பேருந்துகளை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக எம்.எல்.ஏ விடுதிகளில் சிலரிடம் விசாரித்த போது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கார் வைத்திருப்பதால், அவர்களுக்கு பேருந்துகளின் தேவை இருப்பதில்லை என்கின்றனர். இவ்வாறு தேவையில்லாத போதிலும் குளிர்சாதனப் பேருந்துகளை இயக்குவதால் அரசுக்கு ஏற்படும் செலவினை மிச்சம் செய்தால், மக்கள் சேவைக்கு அந்தத் தொகையை பயன்படுத்தலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.