தமிழ்நாடு

கருணாஸ் மீண்டும் கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

கருணாஸ் மீண்டும் கைது: நாளை நீதிமன்றத்தில் ஆஜர்

webteam

சென்னையில் பதிவுசெய்யப்பட்டிருந்த மேலும் 2 வழக்குகளின்படி, சிறையில் இருக்கும் கருணாஸ் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

தமிழக முதல்வர், காவல்துறை அதிகாரி உள்ளிட்டோரை சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால், கருணாஸ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கருணாஸை ஏழு நாள் காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி காவல்துறையினர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அவரை காவலில் விசாரிக்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், கருணாஸின் ஜாமீன் மனு மீதான விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தது. ஜாமீன் மனு மீது காவல்துறை பதில் அளிக்காததால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரி அரவிந்தன் மீது கருணாஸ் சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் புகாரை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும் என இன்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முக்குலத்தோர் புலிப்படை கட்சியை சேர்ந்த தாமோதரன் மீது அரவிந்தன் பொய் வழக்குகளை போட்டு துன்புறுத்துவதாக, அவரது மனைவி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதனால் காவல்துறை அதிகாரி அரவிந்தனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறையில் உள்ள கருணாஸ், மேலும் இரண்டு வழக்குகளின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.