தமிழ்நாடு

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் ஈவிரக்கமின்றி மீறப்பட்டுள்ளது: ஸ்டாலின்

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகள் ஈவிரக்கமின்றி மீறப்பட்டுள்ளது: ஸ்டாலின்

webteam

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் இருக்கும் விவரங்களை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ‌அவர், நெடுவாசல் மக்களின் அச்ச உணர்வு பற்றி துளியும் கவலைப்படாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு கையெழுத்திட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியிருக்கிறார். தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி இத்திட்டத்திற்கு அனுமதி கொடுப்பதை தவிர்க்கும்படி திமுக எம்பிக்கள் மூலம் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்ததை சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும், தமிழக பாரதிய ஜனதா தலைவர்களும் நெடுவாசல் கிராம மக்களுக்கும் விவசாயிகளுக்கும் அளித்த வாக்குறுதிகள் ஈவு இரக்கமின்றி மீறப்பட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது என்று சட்டப்பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் அளித்த வாக்குறுதியை முதலமைச்சர் பழனிசாமி காப்பாற்ற வேண்டும் எனவும் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.