தமிழ்நாடு

அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்: ஓபிஎஸ் மற்றும் அவரது மகன்கள் குறித்து ஸ்டாலின் விமர்சனம்

webteam

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கி வரும் தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில், அவரது இரண்டு மகன்களும் இயக்குநர்களாக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட் ஒன்றிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின்,

''துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்களான, அ.தி.மு.க.,வின் தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திரு. ரவீந்திரநாத் குமார் மற்றும் திரு. ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குநர்களாக இருக்கும் “விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனம்,

திருப்பூரில் செய்யவிருக்கும் தங்களது “ரியல் எஸ்டேட் பிராஜெக்ட்டு”களைப் பதிவு செய்து கொள்ள, துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்திடம் கடந்த 20.1.2020 அன்று விண்ணப்பித்திருப்பது, அதிலும் தமது முகவரியாக அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் முகவரியை குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

தமது தந்தை அமைச்சராக இருக்கும் துறையின் கீழ் வரும் குழுமத்திடம், மகன்கள் இருவரும் தாங்கள் இயக்குநர்களாக உள்ள நிறுவனத்தின் கட்டுமானத் தொழிலைப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளது, ஆட்சியையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்யும் அப்பட்டமான முயற்சியாகும். ஆதாய முரணாகும். ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் என்ற முறையில், இந்தப் பிரச்சினை குறித்துத் தமிழக மக்களுக்குத் தக்க விளக்கம் அளித்திடக் கடமைப் பட்டிருக்கிறார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.