தமிழ்நாடு

“நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் நடுநடுங்க வைத்துள்ளனர்”- மு.க.ஸ்டாலின்

“நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் நடுநடுங்க வைத்துள்ளனர்”- மு.க.ஸ்டாலின்

Rasus

நாடாளுமன்றத்தை திமுக எம்பிக்கள் நடுநடுங்க வைத்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவர்களின் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த ஆண்டு இதே நாளில், உடல் நலக்குறைவால் காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, கருணாநிதியின் வெண்கலசிலை முரசொலி அலுவலக வளாகத்தில் திறக்கப்பட்டது. மேற்கு வங்‌க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கருணாநிதியின் சிலையை திறந்து‌வைத்தார்.‌

இதன்பின் கருணாநிதியின் நினைவுதின பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ இழக்கக் கூடாதவரை இப்போது இழந்து நிற்கின்றோம். பேனாவையும், தாளையும் அவரிடம் கொடுத்தால் அண்ணா என்றே எழுதினார். கருணாநிதியின் காதுகளில் முரசொலி என்றே ஒலித்தது. இன்னும் பல ஊர்களில் கருணாநிதியின் சிலை அமைக்கப்படவிருக்கிறது. சிலை வைக்கிறோம் என்றால் அது கொள்கைகளை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்மொழிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதனால், கருணாநிதி இன்னும் அதிகம் தேவைப்படுகிறார். சமூகநீதிக்கு உலைவைக்க பொருளாதார அளவுகோல் வந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் தினமும் போராடினர். நாடாளுமன்றத்தையே திமுக எம்பிக்கள் நடுநடுங்க வைத்திருக்கின்றனர். பரூக் அப்துல்லா வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது. தேசபக்தி பாடத்தை திமுகவுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.