மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான் என வடிகட்டிய பொய்யை முதலமைச்சர் கூறியிருக்கிறார் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர் ஜெயலலிதா என தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் கனவுத் திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, அதற்கு வித்திட்டவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக்கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர், அரசு விழாவில் அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்பது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்தான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு டெண்டர்கள் திமுக ஆட்சியிலேயே வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள ஸ்டாலின் இலைசோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல முதலமைச்சர் நடந்துகொள்வதாக குற்றம்சாட்டினார். மெட்ரோ ரயில் சேவையை தொடங்கவேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியிருப்பதும் அதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார் மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்றும், பெற்று எடுக்காத பிள்ளைக்கு முதல்வர் பெயர் வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எஞ்சியிருக்கின்ற மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு சென்னை மாநகரின் போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சரும், அதற்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்