தமிழ்நாடு

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்ப பெறுக - மு.க.ஸ்டாலின்

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ திரும்ப பெறுக - மு.க.ஸ்டாலின்

webteam

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏற்கனவே இருக்கும் 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு மற்றும் சுற்றுப்புறச்சூழல் தாக்கம் இல்லாத திட்டங்களை நிறைவேற்றவும் கை கொடுக்கவில்லை என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் எல்லாம் குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்ற வேளையில், இந்த புதிய வரைவு அறிவிக்கை கொண்டு வந்திருப்பது சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-ஐ ரத்து செய்வதற்குச் சமமான அநீதியாக உள்ளது.

பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. மக்களின் சுகாதாரம் - நலன் இரண்டும் காற்றில் பறக்கவிடப்பட்டு - அவசர கதியில் இந்தச் சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கையை உறுதி செய்ய - கொரோனா காலத்தில் - குறிப்பாக நாடு முழுவதும் தினமும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நேரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு கருத்துக் கேட்கிறது என்றால் எத்தகைய கொடுமையான நிர்வாக நடவடிக்கை இது ?

ஆகவே சுற்றுப்புறச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை - 2020-ஐ ஏற்கனவே உள்ள 2006, அறிவிக்கையை விடக் கடுமையாக்கி - நாட்டில் உள்ள இயற்கை வளங்களையும், மக்களின் சுகாதாரத்தையும் பாதுகாத்திட மத்திய பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தும், அதேவேளையில் - இந்த அறிவிக்கையைத் தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட்டு - மாவட்ட வாரியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அந்த ஜனநாயக நடைமுறை இயலாது என்று பா.ஜ.க. அரசு கருதுமேயானால் - கொரோனா காலத்தில் இந்த அறிவிக்கையை வெளியிட்டு கருத்துக் கேட்கும் முடிவினை உடனடியாகக் கைவிட்டு - அறிவிக்கையைத் திரும்பப் பெற்று - நாடாளுமன்றம் கூடியவுடன் இரு அவைகளிலும் முழு விவாதம் நடத்தி - சாதக பாதக அம்சங்களை நன்கு ஆராய்ந்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவசரப் படாமல் முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

“நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சி வேண்டும்” – ஆனால் அதே நேரத்தில், “ஆரோக்கியமான சுற்றுப்புறச்சூழல் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் வாழ்வுரிமை” என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மனதில் கொண்டு, மத்திய பா.ஜ.க. அரசு ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.