தமிழ்நாடு

விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்க: மு.க.ஸ்டாலின்

Rasus

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக பதவிநீக்கம் செய்ய வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அதிமுக ஆட்சியில் தமிழகம் மிகப்பெரிய தலைகுனிவை சந்தித்து வருகிறது என்பதற்கு இந்த வருமான வரித்துறை சோதனைகள் சாட்சியாக அமைந்துள்ளன எனக் கூறியுள்ளார்.

இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகள் பற்றி உரிய விளக்கத்தை மத்திய அரசுதான் நாட்டு மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கூறியுள்ளார். வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சரின் வீட்டிற்கு மற்ற அமைச்சர்கள் சென்று ஆதரவு தெரிவிப்பதும் வருமான வரித்துறை அதிகாரிகளுடன் பிரச்னை செய்வதும் கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி நீக்கம் செய்யவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால் பொறுப்பு ஆளுநர் அமைச்சரை டிஸ்மிஸ் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர்களாக இருந்தவர்கள், அமைச்சரவையில் இரண்டாவது அந்தஸ்தில் இருந்து ஊழலுக்கு துணை போன அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அதிமுக அமைச்சர்களின் ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு முடிவு கட்டும் வகையில் வருமானவரித்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.