தமிழ்நாடு

சசிகலா குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின்

சசிகலா குற்றச்சாட்டுக்கு பதிலளித்து தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.. மு.க.ஸ்டாலின்

Rasus

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தன்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலாவுக்கும், முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது. அதிமுக-வின் கட்சி பொறுப்பையும், ஆட்சி பொறுப்பையும் யார் கைப்பற்றுவது என்பதில் இருவருக்கும் உச்சகட்ட மோதல் வெடித்துள்ளது.

இந்நிலையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார். இரவு 7 மணியளவில் நடைபெற்ற இந்த சந்திப்பில், துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆளுநருடான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அரசு முடங்கி நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்தார். இதனை சுட்டிக்காட்டி அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என ஆளுநரிடம் தான் வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தலை கூட நடத்துவதற்கு அரசு முன்வராத நிலையில் இருப்பதாக கூறினார்.

சிறைபிடிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களை மீட்டு, சட்டமன்றத்தில் வெளிப்படையாக வாக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தன்னுடைய நேரத்தையும், தரத்தையும் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை எனவும் கூறினார்.