தமிழ்நாடு

“ஆளுநர் உரை வெறும் ட்ரைலர்தான்; மீதியை பொறுத்திருந்து பாருங்கள்” - முதல்வர் ஸ்டாலின்

Sinekadhara

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது பேசிய அவர், நீதிக்கட்சி வழியில் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. நீதிக்கட்சியின் தொடர்ச்சி அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான். கடந்த 2 நாட்களில் அனைத்து கட்சிகளை சேர்ந்த 22 எம்.எல்.ஏக்கள் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லமுடியாது. ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு காலத் திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ஆளுநர் உரை ஒரு ட்ரெய்லர்தான் மீதியை பொறுத்திருந்து பாருங்கள். திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

திமுக பதவி ஏற்றபோது கொரோனா பரவல் தமிழகத்தில் உச்சத்தில் இருந்தது. அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளால் தினசரி கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை என்கிற நிலையை மாற்றி இருக்கிறோம். மார்ச் மாதம் முதலே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும் காரணத்தை ஏற்கமுடியாது’’ என்று பேசினார்.