தமிழ்நாடு

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என ஆர்டிஐ-ல் அம்பலம் - ஸ்டாலின்

மதுரையில் எய்ம்ஸ் அமைக்க தமிழக அரசு இடம் தரவில்லை என ஆர்டிஐ-ல் அம்பலம் - ஸ்டாலின்

Sinekadhara

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என RTI அம்பலப்படுத்தியிருக்கிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது, அதன்படி 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் அதற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. அதன்பிறகு, சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளும் தொடங்கியது. ஆனால் நடுவே கொரோனா வந்ததால் பணியில் தொய்வு ஏற்பட்டது. அதுகுறித்து பலரும் விமர்சித்து வந்த நிலையில், எங்கய்யா எய்ம்ஸ்? என்ற வாசகத்துடன் எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்று ஒட்டப்பட்ட போஸ்டரும் மிகவும் வைரலாகியது.

இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின், ’’மத்திய, மாநில அரசின் அலட்சியத்தால் எய்ம்ஸ் அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கம் கொண்டிருக்கிறது. மதுரையில் எய்ம்ஸ் அமைக்க மாநில அரசு இடம் தரவில்லை என ஆர்டிஐ அம்பலப்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்காளர்களை ஏமாற்றும் நோக்கில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மீண்டும் ஒரு கபட நாடகம் போட எத்தனிக்காமல் உடனே நடவடிக்கை தேவை.

மேலும், ஜிக்கா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அதுவும் கையெழுத்து ஆகவில்லை. நிலம் ஒதுக்க கையெழுத்து போடுவதற்கு 18 மாதங்களா?; இதிலும் பேரம் பேசலாம் என்ற எண்ணமா?’’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.