தமிழ்நாடு

இனியாவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

இனியாவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

webteam

கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி 2 சிறுமிகள் பலியாகியுள்ள நிலையில் இனியாவது அரசு விழித்துக்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை கொடுங்கையூரில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 2 சிறுமிகள், மின்சாரப் பெட்டியில் இருந்து கசிந்த மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை 8 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முகநூலில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், “மழைக் காலத்திற்கான முன்னெச்சரிக்கை பணிகளில் அலட்சியம் காட்டிய அரசின் மெத்தனத்தால் மின்சாரம் தாக்கி கொடுங்கையூரில் இரு சிறுமிகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களின் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். எச்சரிக்கை விடுத்தும் தூங்கி வழிந்த குதிரை பேர அரசின் அலட்சியத்திற்கு குழந்தைகள் பலியாகி உள்ளன. அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் இனியாவது அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.