தமிழ்நாடு

உள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா ? - ஸ்டாலின் கேள்வி

உள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா ? - ஸ்டாலின் கேள்வி

webteam

உள்ளூரில் உள்ள நீரை சேமிக்க முடியாமல், நீர் சிக்கனம் பற்றி அறிய முதலமைச்சர் இஸ்ரேல் செல்வதாக கூறுவது வேதனையளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை காலை சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தன்னுடைய வெளிநாட்டு பயணம் மீண்டும் தொடரும் என கூறினார். தமிழ‌க ‌பாசனம் மேம்‌பாடு அடைய‌ இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாக அப்போது தெரிவித்தார்.

முதல்வரின் இஸ்ரேல் பயணம் குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலில் வீணாக கலக்கும் தண்ணீரைப் பற்றி முதல்வர் கவலைப்படாதது வேதனையளிக்கிறது எனக் கூறியுள்ளார். உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் செல்கிறேன் என முதலமைச்சர் சொல்வது விநோதமாகவுள்ளது எனக் கூறியுள்ள ஸ்டாலின், நீர் மேலாண்மை குறித்து ஆளும் அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என குற்றம்சாட்டியுள்ளார். 

மேலும், வருகிற தண்ணீரையும் பாதுகாக்க முடியாமல் வீணடிக்கும் புதுப்பணித் துறையாக பொதுப்பணித் துறை மாறியுள்ளது என அவர் விமர்சித்துள்ளார். தானும் ஒரு விவசாயி என்று மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிக் கொண்டே இருக்கும் முதலமைச்சர், விவசாயிகளுக்கு சாதகமான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது முதலமைச்சர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.