தமிழ்நாடு

மெரினாவில் இடம், ஸ்டாலின் கண்ணீர்!

webteam

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேட்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தில் 5 முறை முதலமைச்சராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று காலமானார். அவர் உடலை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணாதுரை சமாதி அருகே அடக்கம் செய்ய திமுக கோரிக்கை வைத்தது. அதை தமிழக அரசு ஏற்கவில்லை. காந்திமண்டபம் அருகே இடம் ஒதுக்கி தருவதாக அறிவித்தது.
இதை எதிர்த்து திமுக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவசர வழக்காக இந்த வழக்கு நேற்று விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்றும் தொடர்ந்தது. அரசு தரப்பும் திமுக தரப்பும் கடுமையாக வாதம் செய்தன. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பின்னர், கருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்குமாறு அதிரடி தீர்ப்பை வழங்கினர்.

இந்தத் தீர்ப்பை, ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே நின்றுகொண்டிருந்த மு.க.ஸ்டாலினிடம், துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ் .பாரதி ஆகியோர் தெரிவித்தனர். இதைக் கேட்ட மு.க.ஸ்டாலின் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர்விட்டு அங்கு கூடியிருந்தவர்களை நோக்கி கும்பிட்டார். பின்னர் அவர் தடுமாறினார். அவரைக் கண்டதும் அருகில் இருந்த கனிமொழி, துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் கண்ணீர் விட்டனர். இதைக் கண்ட தொண்டர்களும் கண்ணீர் விட்டனர்.