தமிழ்நாடு

அதிமுக அணிகளை புனிதர்களாக்க வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Rasus

ஊழல் பாவக்கறை படிந்த அதிமுகவின் இரு அணிகளையும் புனிதர்களாக்க வேண்டாம் என மத்திய அரசை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் மீண்டும் ஒருமுறை ஊழல் ராஜ்ஜியத்தை ஒருங்கிணைந்து நடத்த சதித் திட்டம் போடுவதாக விமர்சித்துள்ளார்.

ஒரு ஊழலை வெளியேற்றிவிட்டால், மற்றவர்களின் ஊழல்கள் மறைக்கப்படும், அவர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற உத்தரவாதத்தை கொடுத்தது யார் என்றும் வருமானவரித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முற்படுபவர்கள் யார் எனவும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஊழல் புகாருக்குள்ளான அதிமுகவின் இரு அணிகளுக்கும் வாக்குறுதி கொடுத்திருப்பது யார் என்ற கேள்வியும் தவிர்க்க முடியாதது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்செயலில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்ட ஒருவரது வாக்குமூலத்தின்பேரில் டெல்லியில் வழக்குப்பதிவு செய்தது சரி என்றால், ஆர்.கே.நகர் தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப்பட்டுவாடா விவகாரத்தில் இதுவரை வழக்குப்பதிவு செய்யாதது ஏன் என வினா எழுப்பியுள்ளார்.

ஆண்டது போதும், தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும் என அதிமுகவின் இரு அணிகளையும் திமுக சார்பில் எச்சரிக்க விரும்புவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முறைகேடு புகார்களுக்குள்ளான முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது ஒளிவுமறைவற்ற வகையில் மேல் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டுமொத்த அமைச்சர்களின் ஊழல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பணியில் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.