தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 67 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்!

மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்: 67 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாட்டம்!

webteam

கரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி திமுகவினர் கொண்டாடினர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் முழுவதும் திமுகவைச் சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் கேக் வெட்டியும், அன்னதானம் அளித்தும் ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கரூரில் 67 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி ஸ்டாலின் பிறந்தநாளை திமுகவினர் கொண்டாடினர். கரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன் தொடக்க நிகழ்வாக இன்று காலை திமுக அலுவலகத்தில் மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவும் ஆன செந்தில் பாலாஜி தலைமையில் கேக் வெட்டப்பட்டது. வெட்டப்பட்ட கேக் அங்கு கூடியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் திமுக மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் இன்று நடைபெறுகின்றன

முன்னதாக, கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் நலிவுற்றுள்ளதால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நேரில் வரவேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.