வேலூர்: கொலை செய்யப்பட்ட பிரசாந்த் முகநூல்
தமிழ்நாடு

வேலூர் | மணல் கொள்ளையை தட்டி கேட்ட திமுக நிர்வாகியின் மகன், விவசாய நிலத்தில் சடலமாக மீட்பு!

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பேரணாம்பட்டு திமுக ஒன்றிய அவைத்தலைவராக உள்ளார். இவரது மகன் பிரசாந்த் (20). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விவசாய நிலத்திற்கு மாடு ஓட்டி சென்றபோது காணாமல் போய் உள்ளார்.

வேலூர்: கொலை செய்யப்பட்ட பிரசாந்த்

இதுகுறித்து சீனிவாசன் பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பேரணாம்பட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று காலை குண்டலப்பள்ளி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பிரசாந்த் சடலமாக இருப்பது தெரிய வந்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற பேரணாம்பட்டு காவல் துறையினர் உடலை கைப்பற்ற முயன்ற போது உறவினர்களும், பொதுமக்களும் சடலத்தை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், பிரசாந்த் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், பேர்ணாம்பட்டு - வி.கோட்டை சாலையில் சுமார் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல்

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமச்சந்திரன் மற்றும் வருவாய் துறையினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் சாலை மறியல் கைவிடப்பட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதனால், பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் இவரது, உடல் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சாலை மறியல்

இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்பொழுது, ”இந்த பகுதியில் மணல் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து உயிரிழந்த பிரசாந்த் மற்றும் அவரது தந்தை சீனிவாசன் உள்ளிட்டோர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால், அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து மிரட்டல்கள் வந்தது” என்று தெரிவித்தனர். இதையடுத்து கொலைக்கான முன்விரோதம் என்ன என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நிர்வாகியின் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.