தமிழ்நாடு

மதுரை: காணாமல்போன வைர மோதிரம்; 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த போலீஸ்

மதுரை: காணாமல்போன வைர மோதிரம்; 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துக் கொடுத்த போலீஸ்

kaleelrahman

திருமண நிச்சயதார்த்தத்தில் மணப்பெண்ணுக்கு அணிவிப்பதற்காக வாங்கிய வைர மோதிரம் எதிர்பாராதவிதமாக காணாமல் போன நிலையில், அதனை சிசிடிவி காட்சிகளின் மூலமாக 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து உரியவரிடம் மதுரை தீடீர்நகர் காவல் துறையினர் ஒப்படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மோகித் அஜித். திருமண நிச்சயதார்த்தத்தில் மணப்பெண்ணுக்கு அணிவிப்பதற்காக மதுரை அண்ணாநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூபாய் 40 ஆயிரம் மதிப்புள்ள வைரம் பதித்த தங்க மோதிரம் ஒன்றை வாங்கியுள்ளார். பிறகு மேலமாசி வீதியில் உள்ள ஜவுளிக் கடையில் துணி எடுத்து விட்டு திரும்பும்போது வைர மோதிரத்தை தவறவிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகித் அஜித், திடீர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத்தொடர்ந்து, தொலைந்துபோன வைர மோதிரத்தை கண்டுபிடிக்க சார்பு ஆய்வாளர் மரியசெல்வம் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் தலைமை காவலர் ஜெகதீசன், சுந்தர், அன்பழகன், கணேஷ் குமார் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதனடிப்படையில் மதுரை செல்லூர் அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்ற ஆட்டோ ஓட்டுநர் காணாமல்போன வைர மோதிரத்தை எடுத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அவரிடமிருந்து வைர மோதிரத்தை கைப்பற்றி உரியவரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாநகருக்குள் காணாமல்போன வைர மோதிரத்தை 24 மணி நேரத்தில் மிக துரிதமாகவும் சாதுர்யமாகவும் கண்டுபிடித்து கொடுத்த தனிப்படை பிரிவு சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்களை மதுரை மாநகர காவல்துறை உயரதிகாரிகள் பாராட்டினர்.