தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம் - பனை ஓலை அச்சுடன் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் அதிசயம் - பனை ஓலை அச்சுடன் கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி

webteam

ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் தொடரும் அதிசயம். முதுமக்கள் மூடி தாழியில் பனை ஓலை அச்சு கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020ம் ஆண்டு அறிவித்திருந்தார்.

அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல் துறை சார்பில் திருச்சி மத்திய தொல்லியல் மண்டல இயக்குனர் அருண் ராஜ் தலைமையில் அகழாய்வு பணிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் கிடைக்கும் பொருட்கள் அனைத்தும் இங்கு காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அகழாய்வு பணியில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதவிர தங்கத்தால் ஆன நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் சி சைட் என அழைக்கப்படும் 1903 ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ரியா அகழாய்வு செய்த பகுதியில் நடந்து வரும் அகழாய்வு பணியில் தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதுமக்கள் தாழிகளின் மூடிகளும் கூம்பு வடிவில் இருக்கும். ஆனால் ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது.

அந்த தட்டை வடிவில் உள்ள இடத்தில் பனை ஓலைப்பாய் அச்சுகள் உள்ளன. அந்த அச்சுகள் பனை ஓலையில் ஆனதா, அல்லது கோரைப்பாயால் ஆனதா என்ற விவரம் தெரியவில்லை. முதுமக்கள் தாழிகள் செய்யும்போது, அதனை காய வைப்பதற்கு இந்த பனை ஓலையில் மேல் வைத்திருக்கலாம் என்ற கருத்தும் கூறப்படுகிறது. இதை வைத்து பார்க்கும்போது 3000 ஆண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் பனை மற்றும் பனை சார்ந்த பொருட்களை பயன்படுத்தியுள்ளது உறுதியாகி உள்ளது.

ஆதிச்சநல்லூர் பரம்பை சுற்றி ஏராளமான பனை மரங்கள் உள்ளது. அதே போல் அருகில் ஓடும் தாமிரபரணி ஆற்றில் கோரைப்புல்கள் உள்ளது. எனவே இதை முன்னோர்கள் பயன்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஆதிச்சநல்லூரில் பழமையான நாகரித்தைச் சார்ந்த பொருட்கள் கிடைத்து வருவதால் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் உற்சாகமடைந்துள்ளனர்