ஈஷா யோகா மையம் முகநூல்
தமிழ்நாடு

"ஆய்வு செய்ய மூன்று வருடமா?" அமைச்சரை நோக்கி துரைமுருகன் கேள்வி!

“யானை வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்து கட்டியுள்ளதா? இல்லையா? என்பது குறித்து மூன்று ஆண்டுகள் ஆகியும் அமைச்சர் ஆய்வு செய்யவில்லையா?” என அவையின் முன்னவர் துரைமுருகன் வனத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

வனத்துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டச்சபையில் நடந்தது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மவுலானா “கோவையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையம் யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர், “யானை வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமித்துள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்பு, இதுகுறித்த பதிலை கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.

அப்போது, பேசிய அமைச்சரும், அவையின் முன்னவருமான துரைமுருகன். “திமுக அரசு அமைந்து 3 ஆண்டுகள் ஆகியும், வனத்துறை அமைச்சகம் என்ன செய்கிறது? இன்னுமா ஆய்வு செய்யவில்லை? உடனடியாக இதற்கான பதிலை நேரடியாக அமைச்சரே பதில் கூற வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு மீண்டும், ‘முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்ற பின்பு, கூறுகிறேன்’ என்று அமைச்சர் பதிலளித்தார்.

வெள்ளயங்கிரி அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தை பொறுத்தவரை யானையின் வழித்தடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், தனது சக அமைச்சருக்கே அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.