ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ள " THE ELEPHANT WHISPERERS" ஆவணப் படத்தில் நடித்துள்ள பழங்குடியின தம்பதிகளை நேரில் சந்தித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் தாயை பிரிந்த நிலையில் பராமரிக்கப்படும் குட்டி யானைகள் குறித்த ஆவணப்படம் " THE ELEPHANT WHISPERERS" என்ற பெயரில் வெளியானது. அந்த குட்டி யானைகளை பழங்குடியின தம்பதிகளான பொம்மன் மற்றும் பெல்லி ஆகியோர்கள் எப்படி வளர்த்து பராமரித்தார்கள் என்பதை கதையாகக் கொண்டு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்குச் சென்றனர். இதையடுத்து ஆவணப் படத்தில் நடித்த குட்டி யானைகளை நேரில் பார்த்த அவர்கள், அதில் இடம்பெற்ற பழங்குடியின தம்பதிகளையும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறி பண முடிப்பும் வழங்கினர்.