சனாதன வழக்கு புதிய தலைமுறை
தமிழ்நாடு

சனாதன வழக்கு: உதயநிதி தரப்பு வாதமும் உயர்நீதிமன்றத்தின் முடிவும்

மத நம்பிக்கையை மட்டுமின்றி நாத்திக கொள்கைகளையும் அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பதாக அமைச்சர் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

PT WEB

சனாதன தர்மத்திற்கு எதிராக பேசியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதில், மத நம்பிக்கையை மட்டுமின்றி நாத்திக கொள்கைகளையும் அரசியலமைப்பு சட்டம் பாதுகாப்பதாக அமைச்சர் உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது.

இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கோ வாரண்டோ வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. 
அப்போது, அமைச்சர் உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதாடுகையில், “சனாதன தர்மத்தில் இருக்கும் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என உயர்நீதிமன்றமே கூறியிருக்கிறது.

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதனை கேட்காமல் இருக்க வேண்டுமே தவிர, அவரது கருத்துரிமையை தடுக்க முடியாது. அரசியலமைப்பு சட்டம் மத நம்பிக்கையை மட்டுமில்லாமல் நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது.

மேலும், 1902 மற்றும் 1937ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களின் அடிப்படையில்தான் உதயநிதியின் பேச்சு இருந்தது” என்று பேசினார்.

அப்போது, சனாதன தர்மத்தை புரிந்துகொள்ள என்ன ஆராய்ச்சி செய்தார் என உதயநிதி தரப்பிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி, அவர் நிகழ்த்திய உரையையும், பனாரஸ் இந்து பல்கலைகழகம் பிரசுரித்த உரையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதனை அடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற வெள்ளிக்கிழமைக்கு (நாளை) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.