அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  PT WEB
தமிழ்நாடு

“இது பதவியல்ல.. பொறுப்பு..” - ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்து உதயநிதி ஸ்டாலின் கூறுவதென்ன?

“துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக பணியாற்றுவேன்” என்று உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

PT WEB

“கோரிக்கை வலுத்திருக்கிறது, பழுக்கவில்லை...”

“மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது...”

- இதுதான் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு கொடுப்பது தொடர்பாக அமெரிக்க பயணத்திற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் ஸ்டாலின் அளித்த பதில்கள்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சர் கூறியது போன்றே அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராகி உள்ளார். மேலும், முதலமைச்சரின் வசம் இருந்த திட்டமிடுதல் மற்றும் வளர்ச்சித்துறை, உதயநிதிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு மற்றும் அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

இந்த சந்திப்புக்கு பின் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைத்தள பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “துணை முதலமைச்சர் என்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை உணர்ந்து தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, பெரியார், அண்ணா, கருணாநிதி வகுத்து தந்த பாதையில், முதலமைச்சரின் வழிகாட்டலில், சக அமைச்சர்களோடு இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

UdhayanidhiStalin

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானதை தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மன்னார்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் திமுகவினர் உற்சாகமடைந்தனர்.