udhayanidhi stalin meets pm modi pt
தமிழ்நாடு

பிரதமருடன் சந்திப்பு.. திமுகவில் உதயநிதிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்.. துணை முதல்வர் ஆகிறாரா?

PT WEB

ஒலிம்பிக் போட்டிகள் போன்று சர்வதேச போட்டிகளில் சிறந்த வீரர்களை கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாநிலத்தில் கேலோ இந்தியா போட்டிகள் நடத்தப்படும் நிலையில், இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற இருக்கிறது. வரும் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

இந்நிலையில், விழாவில் கலந்துகொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் இருக்கும் பிரதமர் அலுவலகத்தில் மோடியை சந்தித்த உதயநிதி, அவரை அழைத்ததோடு, மத்திய அமைச்சர்களையும் பங்கேற்க கூறுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் நோக்கம் குறித்து பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் நம்மிடம் கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறியதாவது, “அவர் சார்ந்த துறையின் நிகழ்ச்சிக்காக அழைப்பு விடுக்க சென்றிருந்தாலும், அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இது காட்டுகிறது. பொதுவாகவே முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் உதயநிதிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. சில செய்திகளின்படி, பிப்ரவரி மாத வாக்கில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டலாம் என்ற யூகச்செய்தி திமுக வட்டாரத்திலேயே இருந்து வருகிறது. எப்படி இருந்தாலும், விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற சார்பில், அவர் சென்றுள்ளார்.

வேறு கோரிக்கை அல்லது அரசியல் பேசுவதற்கோ இதில் இடம் இல்லை. பிரதமருக்கும் உதயநிதியின் முக்கியத்துவம் புரிந்திருக்கும். ஏற்கனவே உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். இதனால் உதயநிதியின் முக்கியத்துவம், அடுத்த துணை முதல்வர் என்பதெல்லாம் பிரதமர் மோடிக்கு புரிந்திருக்கும். இரண்டு தரப்புக்கும் சரியான விஷயம் என்றாலும், திமுகவுக்கு எதிராக பாஜக எனும் நிலைநிறுத்தலுக்கு இது எப்படி பயன்படும் என்பது கேள்விக்குறிதான்.

தமிழ்நாட்டில் திமுக - அதிமுக என்று இருக்கும் இருதுருவ அரசியலை திமுக - பாஜக என்று மாற்ற இரு கட்சிகளும் நினைக்கின்றன. இப்படி மாறினால் தனக்கு அடுத்த சில தேர்தல்களில் அணுகூலம் ஏற்படக்கூடும் என்று திமுகவும் கருதுகிறது. அடுத்த இரண்டு தேர்தல்கள் இல்லை என்றாலும் 10 வருடங்களுக்கு பிறகு நடக்கப்போவதை மனசில் வைத்து பாஜக காய்களை நகர்த்தும். ” என்றார்.