உதயநிதி - தா.மோ.அன்பரசன் web
தமிழ்நாடு

"அறிவிப்பு வந்துவிடும்".. உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது? அமைச்சர் தா.மோ.அன்பரசன் பதில்!

விரைவில் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.

Rishan Vengai

திமுக இளைஞரணிச் செயலாளராகவும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருக்கும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற குரல் சமீப நாட்களாக திமுக நிர்வாகிகள் இடையே அதிகமாக இருந்துவருகிறது. இதுகுறித்து பல அமைச்சர்களும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டுமென விருப்பம் தெரிவித்துவருகின்றனர்.

இதுகுறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “பொறுப்புகள் மாறுவது குறித்து முதலமைச்சரே முடிவெடுப்பார்” என சூசகமாக கூறியிருந்தார். முதல்வர் முக ஸ்டாலின் கூறுகையில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டுமென்ற “கோரிக்கை வலுத்திருக்கிறதே தவிர இன்னும் பழுக்கவில்லை” என கூறியிருந்தார்.

முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின்

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருதுபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், “உங்களுக்கும் மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம், உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க வேண்டாமா?” என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து நேற்றே உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது, ஆனால் இன்னும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவிக்கப்படாமல் இருந்துவருகிறது.

அமைச்சர் தா.மோ. அன்பரசன்

இந்நிலையில் துணை முதல்வர் பதவி குறித்து பேசியிருக்கும் அமைச்சர் தா.மோ. அன்பரசன், இன்னும் 10 நாளில் அதற்கான அறிவிப்பு வந்துவிடும் என கூறியுள்ளார்.

துணை முதலமைச்சர் பதவி எப்போது? அமைச்சர் சொன்ன பதில்!

காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி திடலில் வரும் 28ஆம் தேதி திமுக பவள விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சியைச் சார்ந்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக பச்சையப்பன் கல்லூரி திடலில் பல்லாயிரக்கணக்கான பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை பார்வையிட்டு ஆய்வு ஆய்வு மேற்கொண்ட சிறு குறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசிய அவர், “விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அறிவித்துவிடுவார்கள். சொல்லப்போனால் அறிவிப்பானது நாளை கூட வந்தாலும் வரலாம், நாங்கள் அனைவரும் அதற்காக தயாராக உள்ளோம்” என அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியுள்ளார்.