மாணவி பிரியாவின் மரண விவகாரத்தை அரசியல் நோக்கோடு அணுகுவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.
ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாநாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ''இன்று நடைபெறும் சுகாதார மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இன்று மாலை வரை இது நடைபெற உள்ளது. முதல்முறையாக மருத்துவத்துறையில் இந்த மாநாடு நடைபெறுகிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இது நடைபெறுகிறது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 96 லட்சம் நபர்களுக்கு மேல் பலன் பெற்றுள்ளனர்.
1,250 இடங்களில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 1260 இடங்களில் இந்த திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்டது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் பலன் பெற்றுள்ளனர். இதுவரை 113 கோடி ரூபாய் வரையில் திட்டத்திற்கு செலவிடப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து, இன்று இறந்த கால்பந்து வீராங்கனை பிரியா குறித்து பேசுகையில், “மாணவி பிரியா உயிரிழப்பு மிக துயரமான நிகழ்வு. அவரது குடும்பத்துக்கு நிவாரணம் அளிக்கப்படும். அவருக்கு பேட்டரி கால் உள்ளிட்டவை பொருத்தப்படும் என அறிவித்திருந்த நிலையில், இப்படியொரு துயரம் நிகழ்ந்துவிட்டது.
மாணவி தற்போது ரத்த நாளங்கள் பாதிப்பின் காரணமாக பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து உயிர் இழந்துள்ளார். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, 10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. மேற்கொண்டு இதனை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். அரசியல் நோக்கோடு இந்த விவகாரத்தை அணுகுவது அரசியல் தலைவர்களுக்கு அழகல்ல. மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் சஸ்பென்ட் செய்யபட்டு உள்ளனர். பணியிட மாற்றம் செய்யப்பட்டு, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. போலவே மாணவி பிரியா மரணத்தை வைத்து பதற்றமான சூழலை யாரும் ஏற்படுத்த கூடாது. இவ்விவகாரத்தில் சட்டப்படி விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். தவறுக்கான பரிகாரமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் பேசுகையில், “தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா கட்டுக்குள் உள்ளது. டெங்குவை பொறுத்த வரையில் கடந்த ஓராண்டில் 5 பேர் மரணமடைந்து உள்ளனர். வேலைவாய்ப்பில் 4,308 பணியிடங்கள் காலியாக உள்ளது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது'' என்றார்.