தமிழ்நாடு

'நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை' -அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி

'நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை' -அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி

webteam

பணியில் இருந்து நீக்கப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் பெருநகர காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சிற்பி திட்டத்தின் கீழ் 100 பள்ளிகளை சார்ந்த 5,000 மாணவர்களுக்கு யோகோ பயிற்சியை அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று காலை தொடங்கி வைத்தனர்.

சென்னையின் அனைத்து பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் மத்தியில் அமைச்சர் மா.சுப்ரமணியன் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் பல்வேறு யோகாவை செய்து காட்டினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ''சென்னையில் நடைபெறும் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் சிற்பி திட்டம் இளைய சமூகத்தினருக்கு வழிகாட்டும் அமைப்பாக முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

கிட்டத்தட்ட 15 திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு போதிக்க காவல்துறை திட்டமிட்டு உள்ளனர். இளைய சமூகத்தினர் தனிமனித ஒழுக்கம், போதை தடுப்பு, தனிபட்ட சுகாதாரம், இயற்கை பாதுகாப்பு, மனித நலன் பேணுதல், யோகோ, தற்காப்பு கலைகள், தேசப்பற்று, அரசு வேலைகளுக்கு செல்வதற்கு தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை குறித்து கற்பிக்கப்பட உள்ளது. சாலை விதிகளை கடைபிடித்தல், இயற்கை சீற்ற நேரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் கற்பிக்கப்பட உள்ளது.

செவிலியர்கள் போராட்டத்தை பொறுத்தவரை செவிலியர்கள் சங்க நிர்வாகிகளை நேரில் அழைத்து இன்று மாலை 3 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். கொரோனா காலத்தில் பணியாற்றிய அவர்கள் அனைவரும் தற்போது பணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்தாலும் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள மாவட்டம் வாரியாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.

மேலும் இதுவரை அவர்கள் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதுவரை பெருநகரங்களில் மட்டுமே அவர்கள் பணியாற்றிய நிலையில், தற்போது அவர்கள் சொந்த ஊர்களில் பணியாற்ற வாய்ப்புள்ளது. சிலர் அவர்களை தூண்டிவிட்டதாலேயே இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. செவிலியர்கள் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

நிரந்தரப் பணியை பொறுத்தவரை நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. உதாரணத்துக்கு கொரோனா காலத்தில் பணியில் சேர்ந்த செவிலியர்கள் சான்றிதழ் சரிபார்க்கப்படவில்லை; இட ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படவில்லை. இப்படி பணியில் சேர்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளது. அதனால் தான் அந்த செவிலியர்களை மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட வேறு இடங்களில் உள்ள காலி பணியிடங்களில் பணிக்கு சேர்க்கப்படும் அறிவிக்கப்பட்டது. அங்கு ரூ.18,000 ஊதியம் வழங்கப்படும்.

எங்களின் நடவடிக்கைக்கு செவிலியர் சங்கம் ஒன்று வரவேற்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளது. உடனே பணி வழங்குகள் என்று கூறியுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு தான் பணியில் சேர்ந்ததாக செவிலியர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அப்படி தான் முறையாக பணியில் சேர்ந்தனரா என்று ஆய்வு செய்யப்படும். அப்படி சான்றிதழ் சரிபார்ப்பு, இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு சேர்க்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

கொரோனா காலம் பேரிடர் காலம் என்பதால் இந்த செவிலியர்கள் அனைவரும் உடனடியாக பணியில் அமர்த்தப்பட்ட நிலையில் தற்போது செவிலியர்கள் கோப்புகளை ஆய்வு செய்யும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.