முதல்வர் ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

பொது சிவில் சட்டம்: பிரதமர் மோடியின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

webteam

தேர்தல் நடைபெறவுள்ள மத்திய பிரதேசத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது முத்தலாக்குக்கு எதிராக பேசிய அவர், இஸ்லாமியப் பெண்களுக்கு இந்தச் சட்டம் மிகுந்த அநீதியை இழைத்து வருவதாகச் சாடினார். ‘ஒரே வீட்டில் வாழ்ந்துவரும் கணவருக்கு ஒரு சட்டம்; மனைவிக்கு ஒரு சட்டம் என இரு சட்டங்கள் தேவையா?’ என கேள்வி எழுப்பிய அவர், பல்வேறு மதங்களில் இருக்கும் தனிப்பட்ட சட்டப் பிரச்னைக்கு பொது சிவில் சட்டம்தான் சரியான தீர்வாக இருக்கும் என உச்ச நீதிமன்றமே பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

PM Modi

இந்தச் சூழலில், நாட்டில் மதத்தை வைத்து குழப்பம் விளைவித்து அதில் ஆதாயம் பெற பிரதமர் மோடி முயற்சிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் கும்மிடிப்பூண்டி வேணு இல்ல திருமண விழாவை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நடத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், “நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து மதரீதியிலான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என பிரதமர் மோடி நினைக்கிறார். ஆனால் வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று கூறினார்.

Bjp-Congress

அதிமுக வைகைச் செல்வன் இக்கருத்து பற்றி பேசுகையில், 'பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும், தமிழகத்துக்குப் பொதுசிவில் சட்டம் தேவையில்லாத ஒன்று என கருத்து தெரிவித்துள்ளது.' என்றார்.

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தமீமுன் அன்சாரி, “கர்நாடகாவை போல் நாடாளுமன்றத் தேர்தலிலும் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சம் காரணமாக, பொது சிவில் சட்டப் பிரச்னையை பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார்” என தெரிவித்தார்.

பாஜகவின் வானதி சீனிவாசன், “பெண்களுக்கான பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவற்றுக்கு, பொதுசிவில் சட்டம் காலத்தின் கட்டாயம்” என கூறுகிறார்

Modi & Amit shah

ஒருபுறம் அம்பேத்கர் கொண்டுவந்தது தான் பொதுசிவில் சட்டம் என பாஜக விளக்கம் அளித்தாலும், மத சுதந்திரத்தில் குறுக்கீடு இருப்பதால் பெருவாரியான அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பொது சிவில் சட்ட விவகாரத்தில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் களையப்படுமா? மோதல் முற்றுமா? என்பது இனிவரும் காலங்களில் தான் தெரியவரும்.