தமிழ்நாடு

“போராட்டங்களால் சீரமைப்பு பணியில் தொய்வு” - அமைச்சர் வேலுமணி

“போராட்டங்களால் சீரமைப்பு பணியில் தொய்வு” - அமைச்சர் வேலுமணி

webteam

சாலை மறியல், அதிகாரிகளுக்கு எதிர்ப்பு போன்றவற்றாலேயே கஜா புயல் சீரமைப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். 

புயலால் பாதிக்கப்பட்ட நாகையில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய பின், புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மட்டும் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 416 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மக்களை தூண்டிவிட்டு, சீரமைப்பு பணிகளுக்கு சிலர் இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாகவே, விரைந்து புனரமைப்பு மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றஞ்சாட்டினர். நாகையில் நடைபெற்ற ஆய்வில் அமைச்சர் உதயகுமாரும் பங்கேற்றார்.

முன்னதாக, கஜா புயல் தமிழகத்தை கடுமையாக தாக்கியது. இதில் லட்சக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் மற்றும் வீடுகள் சூறையாடப்பட்டன. மக்கள் வீடுகளின்றி, உணவின்றி, தங்கயிடமின்றி தவித்து வருகின்றனர். வருமானத்திற்கு வழியாக இருந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் வேரோடு வீழ்ந்ததால், விவசாயிகள மனமுடைந்துள்ளனர்.

வீடுகளை இழந்தோர் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கே உணவுகள் அளிக்கப்படுகிறது. இருப்பினும் சீரமைப்பு பணிகளை அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என பல இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆய்விற்கு சென்ற அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.