தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? பொதுமக்களுக்கு அமைச்சர் அளித்த வாக்குறுதி

webteam

விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் கூடுதலாக வசூல் செய்வதை தடுக்கும் வகையில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுப்பது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு சென்ற பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்ததாக தெரிவித்தார்.

தொடர்ந்து பெண் பயணிகளிடம் முறைத்தல் உள்ளிட்ட தவறுகள் செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை ஆணையர்கள் தலைமையில் பல குழுக்கள் அமைக்கப்பட்டு, 953 பேருந்துகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, 97 பயணிகளிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணத் தொகை 68,800 திருப்பி கொடுக்கப்ட்டதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த வாரம் மூன்று நாள் தொடர் விடுமுறை என்பதால் நேற்று மாலை முதல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளபட்டதாகவும், அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்களிடம் 11 லட்சத்து 4ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு கூடுதல் பேருந்துகள் இயங்கினாலும், மக்கள் சிலர் தனியார் பேருந்தை விரும்புகின்றனர். இதை பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும் டீசல் கட்டண உயர்விற்கு பிறகும், அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லாமல் மக்கள் செல்வதற்கு முதல்வர் உறுதி செய்துள்ளார். அதனை மக்கள் புரிந்து அரசுப் பேருந்துகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடனும் கலந்து பேசி ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வை தடுக்கும் வகையில் சட்டரீதியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஆட்டோ புதிய கட்டணம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், தீபாவளி, பொங்கல் விழாக்களில் கூடுதல் அரசு பேருந்து விடப்படவுள்ளதாகவும் கூறினார். 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 100 மின்னணு பேருந்துகளை வாங்குவதற்காக டெண்டர்கள் வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.