செந்தில் பாலாஜி கோப்பு படம்
தமிழ்நாடு

புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி! #Video

காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

PT WEB

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியின் காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

செந்தில் பாலாஜி

இதையடுத்து உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்பின் உடல்நலத்தை கருத்தில்கொண்டு ஜூலை 26-ம் தேதி வரை பலகட்டமாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மத்திய சிறைக்கு நேற்று மாலை அழைத்துச் செல்லப்பட்டார்.

புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி

புழல் சிறையில் முதற்கட்டமாக ஆவணங்கள், உடல் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 2 மணி நேர பரிசோதனைக்கு பிறகு புழல் மத்திய சிறையில் உள்ள சிறை மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார் என சிறைத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக சிறை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்று அங்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் எனவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.