தமிழ்நாடு

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ500 ஊதியஉயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ500 ஊதியஉயர்வு- அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்

Sinekadhara

தமிழ்நாட்டில் டாஸ்மாக் சில்லறை விற்பனை பணியாளர்களுக்கு 2022 ஏப்ரம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். 24,805 தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதன் மூலம் ரூ.16.67 கோடி கூடுதல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார துறை மானியக்கோரிக்கை பதிலுரையில் பேசிய அமைச்சர், கடந்த 10 வருடங்களில் கேங் மேன் பணியிடங்கள் நிரப்பபடவில்லையென்றும், இதனால் 5 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக கூறினார். இந்த இடங்களை நிரப்புவதற்கு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நல்ல தீர்வு விரைவில் எட்டப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,

1. கள்ளச் சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனையில் ஈடுபட்டு மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி உதவுவதற்காக ரூபாய் 5 கோடி மானியமாக வழங்குதல்.

2. மது அருந்துதல் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ரூபாய் 4 கோடி நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளுதல்.

3. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் அலுவலகத்தில் மேம்படுத்திக் நவீனமயமாக்கல் ரூபாய் 2.50 கோடி நிதி ஒதுக்கீடு.

4.மதுவிலக்கு குற்றவாளிகளின் இரவு நேர சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு 20 சோதனைச் சாவடிகளில் மின்கலத்துடன் கூடிய சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் கருவிகளை ரூபாய் 0.13 கோடி நிதியில் பொருத்தப்படும்.

5.தமிழ்நாடு மாநில வாணிபக் கழக சில்லரை விற்பனை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு ரூபாய் 16.67 கோடி செலவில் வழங்கப்படும்.

6. போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் ரூபாய் ஒரு கோடி நிதி செலவில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.