செய்தியாளர்: சுரேஷ்குமார்
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், சென்னை சேப்பாக்கம் பகுதியில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தயாநிதி மாறனுக்கு ஆதரவாக அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகர மேயர் பிரியா உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாரதிய ஜனதா கட்சியோடு ஏற்கனவே அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகள் தோழமை வைத்துள்ளனர். இந்நிலையில் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சி, புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது. அதனால்தான் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேட்ட சின்னத்தையும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேட்ட சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை.
அதேநேரம் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்ட குக்கர் சின்னம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் கேட்ட சைக்கிள் சின்னம் ஆகியவற்றை உடனடியாக வழங்கி உள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொண்டுள்ளது தெரிகிறது. இதனை நாட்டு மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
I.N.D.I.A. கூட்டணியில் போட்டியிடும் 40 பேரின் முகத்தையும், திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகமாகத்தான் மக்கள் கருதுகிறார்கள். ஆகையால் எங்களுக்கு சின்னத்தைப் பற்றி கவலை இல்லை. 40 தொகுதிகளிலும் I.N.D.I.A. கூட்டணி வெற்றி பெறும்” என்றார்.