Minister Shekhar Babu  file
தமிழ்நாடு

“தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டுக்கு திமுக ஆட்சிதான்” - அமைச்சர் சேகர் பாபு நம்பிக்கை

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

நேற்று சென்னை அம்பத்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார். அதன்பின் பேசுகையில், “இன்னும் கால் நூற்றாண்டு அளவிற்கு தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும். அந்த அளவிற்கு திமுக மக்கள் செல்வாக்கோடு திகழ்கிறது” என பேட்டி அளித்திருக்கிறார் அமைச்சர் சேகர் பாபு.

அம்பத்தூரில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா

முன்னதாக இந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில், சென்னை கிழக்கு மாவட்ட திமுக, ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் ‘மாற்றுத்தின் பெயர் தந்தவர்! மகத்தான புகழானவர்’ என்னும் தலைப்பில் நலிந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 12 இணைப்பு சக்கரம் பொருத்திய இருசக்கர வாகனம், 500 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 1000 ரூபாய், 1500 ரூபாய் மதிப்புள்ள அரிசி பருப்பு உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட பொருட்கள் வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில், தமிழக மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய தலைவர் பேராசிரியர் தீபக்நாதன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறுகையில்...

“பிரதமர் மோடி, இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் அரசராக இருக்கலாம். ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை என்றுமே இரு வண்ணக் கொடிதான். அதை இந்த தேர்தலில் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

அம்பத்தூரில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழா

வருகிற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நம்மை எதிர்த்து போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழக்கும் அளவிற்கு சுறுசுறுப்பாக நம் வேலை நடைபெறும். இது திராவிட மண். பிரதமர் எத்தனை முறை தமிழகத்தில் படையெடுத்தாலும், இன்னும் எத்தனை பதவிகளை வாரி வழங்கினாலும், தமிழகத்தில் இன்னும் கால் நூற்றாண்டுக்கு திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான் நடைபெறும். மக்கள் செல்வாக்கோடு திமுக இருக்கிறது” என்றார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ‘இன்னும் எத்தனை காலம் ஒருவரை சார்ந்திருக்கப் போகிறோம்’ என்று கூறிய கருத்திற்கு பதிலளித்த அவர், “அந்த கட்சித் தொண்டர்களை சமாதானப்படுத்துவதற்கும் கட்சி பணிகளை வாங்குவதற்காகவும் அப்படி சொல்லலாம். அது அவர்களுடைய உரிமை. ஆனால், எங்களை பொறுத்தவரை 2026 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.