அமைச்சர் சேகர்பாபு  புதிய தலைமுறை
தமிழ்நாடு

சுவாமிமலையில் பக்தர்கள் மீது தண்ணீர் அடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு: அமைச்சர் சேகர்பாபு கொடுத்த பதில்

“உண்மை எப்போதுமே உறங்கச் செல்லாது. இரண்டு, மூன்று நாள் வேண்டுமென்றால் உண்மை மறைவில் இருக்கலாம்; ஆனால் ஒருநாள் நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்” என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: சந்தான குமார்

சென்னை திருவான்மையூரில் உள்ள மருதீஸ்வரர் திருக்கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் சார்பில் 31 இணைகளுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியபோது...

நிறைய மக்கள் நலத் திட்டங்களை இந்து சமய அறநிலையைத் துறை செய்து வருகிறது. உதாரணத்துக்கு உயர்கல்வி படிக்கும் மாணவ மாணவிகளில் 22 ஆயிரம் பேர், இந்தத் துறையின் சார்பில் பயின்று வருகிறார்கள். பல்வேறு வகையில் தெய்வ நம்பிக்கை உள்ள 47 ஆயிரம் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜைகளில் பங்கேற்று பலனடைந்துள்ளனர். இப்படி எண்ணிலடங்கா திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பொருளாதாரத்தில் நலிவுற்று இருப்பவர்கள், ‘இறை நம்பிக்கையோடு திருக்கோயில் சார்பில் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று நம்பிக்கையோடு இருப்பவர்கள் என தேர்ந்தெடுத்து 500 ஜோடிகளுக்கு கடந்த 2022 - 2023 ஆம் ஆண்டு துறை சார்பில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த எண்ணிக்கையை 2023 - 2024 ஆம் ஆண்டு 600 ஆக மாற்றினார் முதல்வர். 2024 - 2025 சட்டப்பேரவை அறிவிப்பில் 700 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும் என்று அறிவித்தார் முதலமைச்சர்.

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமை ஏற்று திருமணம் நடத்தி வைத்தார்

இந்த 700 ஜோடிகளில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் திருமணம் செய்து வைத்துள்ளார், தமிழ்நாடு முழுவதும் இன்று 379 ஜோடிகளுக்கு திருமணம் நடந்துள்ளது. துறை சார்ந்த பணிகளில் அறத்தையும் ஒருங்கிணைத்து அறநிலையத் துறையாக இருப்பது திராவிட மாடல் ஆட்சியில்தான்” என்றார்.

தொடர்ந்து சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்....

“சுவாமிமலை கோயிலில் பக்தர்கள் மீது தண்ணீர் ஊற்றப்படவில்லை, விழா காலங்களில் கோயில்களில் யாரும் தங்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. இரவில் நடை அடைக்கப்பட்ட பிறகு, ஒவ்வொரு நாளும் இதுபோன்ற திருவிழா காலங்களில் சுத்தம் செய்வது ஏற்கனவே நடைமுறையில் உள்ள மரபுதான். அப்படி செய்தபோது அவர்கள் மீது நீர் பட்டுள்ளது. மற்றபடி எந்த சம்பந்தமும் இல்லை.

சொல்லப்போனால் இரவு அனைத்து பூஜைகளும் நடந்த பிறகு அடுத்த நாள் காலை பூஜை வழக்கம் போல் தொடங்க வேண்டும் என்பதற்காக தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் பணிதான் நடைபெற்றது. பக்தர்கள் யார் மீதும் தண்ணீர் அடிக்கும் நிகழ்வு நடக்கவில்லை. பக்தர்கள் மீது எந்தவிதமான அட்ராசிட்டியும் நடைபெறவில்லை

சுவாமிமலை

திரித்துக் கூறுவதற்கு இப்படி ஏதாவது கிடைக்குமா என்று கங்கணம் கட்டி செயல்படுபவர்கள் இந்தப் பொய்களை எட்டுக்கால் பாய்ச்சலில் கொண்டு சேர்க்கிறார்கள். உண்மை எப்போதுமே உறங்கச் செல்லாது; இரண்டு நாள், மூன்று நாள் வேண்டுமென்றால் உண்மை மறைவில் இருக்கலாம். ஆனால் ஒருநாள் உண்மை நிச்சயம் வெளிச்சத்திற்கு வரும்” என்று கூறினார்.