முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருவள்ளுார் மாவட்டம், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா நடைபெற்று வருகிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஐந்து நாட்கள் கோயில் நடை இரவிலும் திறந்திருக்கும் என்பதால், திருத்தணிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து அதிக அளவிலான பக்தர்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் காவடிகளுடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்கின்றனர். விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருத்தணி முருகன் கோயிலில் கூட்டம் அலைமோதுவதால், காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது குடும்பத்தாருடன் 365 படிகள் ஏறி வந்து சாமி தரிசனம் செய்தார். மேலும், ஆடி கிருத்திகை திருவிழாவிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்... கடந்த இரண்டு நாட்களில் 3.5 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்றைக்குள் 5 லட்சம் பேர் சாமி செய்ய உள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் குவிந்தாலும் அதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது. எங்கு பார்த்தாலும் அரோகரா கோஷத்துடன் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இதுவே இந்த ஆட்சி ஆன்மிக ஆட்சிக்கு எடுத்துக்காட்டாக உள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.