“தனது வாட்ச் விலையை கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது சொத்து விவரங்களையும், தனது பினாமி சொத்து விவரங்களையும் சொல்ல வேண்டும்” என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.
சென்னை திருவற்றியூரை அடுத்த சாத்தாங்காடு பகுதியில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் கீழ் அமைந்துள்ள இரும்பு எஃகு அங்காடியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ''சாத்தாங்காடு இரும்பு எஃகு அங்காடி பகுதி 203 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 850 தொழில் மையங்கள் அமைக்கும் வசதி உள்ளது. இதில் இடங்களை ஒதுக்கீடு பெற்று பயன்படுத்தாத இடங்கள் மற்றும் ஒதுக்கீடு செய்யப்படாத இடங்கள் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இந்த அங்காடி மூலம் சுற்றுவட்டப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வாய்ப்பாக அமைந்தது.
30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த அங்காடி பகுதியை தற்போது மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதன்படி அங்காடி பகுதி உள்ளேயே மருத்துவமனை, வாகன பழுது பார்ப்பு மையம், எடை மேடை, துணை மின் நிலையம், உணவகம் அமைக்க போன்ற வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்த இடத்துக்கு பேருந்து நிலையமும் ஏற்பாடு செய்யப்படும்.
3 ஆண்டுகளில் இந்த அங்காடி பகுதி மேம்பாட்டு பணிகள் முடிக்கப்படும். இதன் மூலம் இந்த இடம் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும். தொழில் செய்யவும், வேலைவாய்ப்பு உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் மூன்றாவது மாஸ்டர் பிளான் வரைவு திட்ட பணி 2026 ஆம் ஆண்டு தொடங்கும். தற்போது முதல் மற்றும் இரண்டாவது மாஸ்டர் பிளான் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்களுக்கு தேவை உள்ள திட்டங்கள் உள்ளடக்கி சென்னையின் மூன்றாவது மாஸ்டர் பிளான் அமையும்.
பாரிமுனையில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் மாற்றும் போது வெகுதூரம் என்ற ஒரு அச்சம் இருந்தது. ஆனால் தொலைநோக்கு திட்டத்தில் அமைக்கப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையம் மக்களுக்கு பெரும் பயனாக இருந்தது. இதேபோன்று நிலையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையமும் அடையும். அதற்காக மெட்ரோ ரயில் சேவையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை விரிவுபடுத்த மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். அங்கு சாலை விரிவாக்கமும் செய்யப்படும்.
<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/2_CnhEfZHRE" title="LIVE: அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
தற்போது வட சென்னை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம் பெரும் பயனாக உள்ளது. இதேபோன்று தேவை உள்ள இடங்களில் துணை பேருந்து நிலையங்களும் கொண்டு வரப்படும். வட சென்னையில் கனரக வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க ஆய்வு செய்யப்படும். இதற்கு இடம் கிடைத்தால் கனரக வாகன நிறுத்தும் இடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சாலையோரம் வசிப்பவர்கள் யாரும் அங்கு இருக்க கூடாது என்று அரசு செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு இருப்பிடம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசின் நடவடிக்கையால் சாலையோரம் வசிப்பவர்கள் பொருளாதாரம் முன்னேறி வருகிறது. அதனால் அவர்கள் வாடகை வீடுகளுக்கு கூட சென்றுள்ளனர்'' என்றார்.
தொடர்ந்து அதிமுக பற்றி பேசுகையில், “தனது வாட்ச் விலையை கூறிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது பெயரில் உள்ள சொத்து எவ்வளவு உள்ளது என்றும் சொல்லட்டும். பினாமி பெயரில் உள்ள சொத்து குறித்து சொல்லப்படும். மற்றவர்களை கேட்கும் முன்பு ஜெயக்குமார், தானும் வெளிப்படை தன்மையோடு இருக்கட்டும்” என்றார்.