செய்தியாளர்: சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை திருவப்பூரில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் புதிய முன் மண்டபம் கட்டுமான பணியின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில்...
"திராவிட மாடல் ஆட்சியின் கொள்கைகளை தமிழ்நாடு மக்களிடமிருந்து அகற்ற முடியாது என்பதை விஜய் கட்சி வெளியிட்டுள்ள ஜெராக்ஸ் காப்பியிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும். எங்களுடைய கொள்கைகளை அதில் சில வெற்றிக்கு விளக்கங்களை கொடுத்திருக்கிறாரே தவிர திராவிட மடல் ஆட்சியையும் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னெடுத்து செல்கின்ற கொள்கைகளையும் தமிழ்நாடு மக்களிடம் இருந்து எடுத்து விடவும் பிரித்து விடவும் முடியாது.
ஆளுநரை எதிர்த்து பேசினால்தான் தமிழ்நாட்டில் எடுபடும்:
இது வரைக்கும் பல அரசியல் கட்சிகளுடைய ஏ டீம் பி டீம் பார்த்துள்ளோம். அப்படி இது பாஜகவுடைய சி டீம், ஆளுநரை எதிர்த்து பேசினால்தான் தமிழ்நாட்டில் எடுபடும். தமிழ்நாடு மக்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கிற ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசினால் எடுபடாது. வெறுப்புக்கு ஆளாகியுள்ள ஆளுநரை பற்றி பேசினால் அவருக்கு மரியாதை கிடைக்கும் என்பதால் ஆளுநரை எதிர்த்து விஜய் மாநாட்டில் பேசப்பட்டுள்ளதே தவிர இது முழுக்க முழுக்க பாஜகவின் சி டீம். விஜய்க்கு தெரியும் அவர் சி டீம் என்று.
ஆட்சியில் பங்கு என்பது குறித்து பேச முதலில் தேர்தலில் வெற்றிபெற வேண்டும்:
அரசியல் தலைவர் என்பவர், மக்களை சந்திக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்த வேண்டும். மக்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு பிறகுதான் ஆட்சியில் பங்கு என்பதற்கெல்லாம் வாய்ப்பு. நிச்சயம் எங்களது கூட்டணியை யாரும் பிரித்து விட முடியாது. தமிழ்நாடு முதலமைச்சர் காட்டுகின்ற பாசத்தை விட்டு யாரும் சென்று விட மாட்டார்கள்.
தொண்டர்களை இழுக்கவே அதிமுக குறித்து விஜய் பேசவில்லை:
அதிமுக தமிழ்நாட்டில் எடுபடாது என்பது விஜய்க்கு தெரிந்துள்ளது. அதிமுகவை அவர் கட்சியாகவே எடுத்துக் கொள்ளவில்லை, அங்கிருக்கும் தொண்டர்களை இழுக்க வேண்டும் என்பதுதான் அவரது குறிக்கோள். பாஜகவுக்கு வலுவூட்டுகின்ற வகையில் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் இழுப்பதற்காக அதிமுகவைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை. ஊழலை பற்றி பேச வேண்டும் என்றால் 2011 - 21 பற்றிதான் பேச முடியுமே தவிர 21 - 26 பற்றி பேசுவதற்கு முடியாது எந்த தவறுக்கும் நாங்கள் ஆளாகவில்லை.
இளைஞர்கள் திமுகவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்:
பழுத்த பழம்தான் கல்லடி படும். திமுகவை பற்றி தாக்கி பேசினால்தான் மக்கள் மன்றத்தில் ஏதாவது பேச முடியும். தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா, பெரியார், கலைஞர் போல் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கக் கூடியவர் எங்களது தலைவர் முக.ஸ்டாலின். இதை மீறி யாரும் அரசியல் செய்ய முடியாது இவர்களைப் பற்றி பேசாமல் யாரும் அரசியல் செய்து விடவும் முடியாது. இளைஞர்கள் திமுகவை நம்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நேற்று அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியே எடுத்துக்காட்டு.
திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை:
திராவிடம் என்பது தமிழ் மண்ணில் இருந்து அகற்றப்பட முடியாத ஒன்று. அந்த சொல் வந்ததற்கு பிறகு எது வேண்டுமானாலும் வரட்டும்; பிரச்னை இல்லை. நாங்களும் தமிழ்நாடு என்றுதான் சொல்கின்றோம். தமிழர்களின் முன்னேற்றத்தை பற்றிதான் பேசுகின்றோம். திராவிடம் இல்லாமல் தமிழ்நாடு இல்லை.
இந்தியாவிலேயே சிறுபான்மையினர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது திமுகதான். அதற்காக நாங்கள் எவ்வளவு பழிவாங்கப்பட்டிருக்கின்றோம் என்பது நாடறிந்த உண்மை. நேற்று நடந்த மாநாடு எங்களைப் பொறுத்தவரை சினிமா குறித்தான மாநாடு” என்று தெரிவித்தார்.