செய்தியாளர் - சுப.முத்துப்பழம்பதி
புதுக்கோட்டை நகர மன்ற வளாகத்தில் நடைபெற்ற கம்பன் கழகத்தின் விழாவில் நேற்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பங்கேற்றார்.
விழாவில் பேசிய அவர், “முன்னாள் முதல்வர் கலைஞருக்கு முன்னால், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முன்னால் திராவிட மாடல் ஆட்சியை முன்னெடுத்து சென்றிருக்கின்ற, சமூகநீதியின் காவலர் ராமன். சமத்துவம், சமூகநீதி இவற்றையெல்லாம் போதித்த, உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர், எல்லோரும் சமம் என்று சொன்ன ஒரே நாயகன் ராமன்.
தசரனது மகனாகத்தான் விபீஷினனையும், குகனையும், சுக்ரீவனையும் ராமன் ஏற்றுக்கொண்டு இருக்கிறார் என்று சொன்னால், ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும், இருக்க வேண்டும் என்ற உன்னத லட்சியத்தோடு உருவாக்கப்பட்ட காவியம்தான் ராமா காவியம்” என தெரிவித்தார்.
விழாவின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கம்பராமாயணத்தில் ராமனை பற்றி சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கள் திராவிட மாடல் ஆட்சியை ஒட்டிய கருத்துக்கள். திராவிட மாடல் கொள்கையில் கம்பன் எந்த அளவுக்கு ஈடுபட்டிருந்தார், உடன்பட்டு இருந்தார், சமரசப்பட்டு இருந்தார் என்பதைத்தான் நான் குறிப்பிட்டேன். சமத்துவம், சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம் இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
‘குகனோடு சேர்ந்து ஐவரானோம், சுக்கிரனோடு சேர்ந்து அறுவர் ஆனோம், விபீஷனனோடு சேர்ந்து ஏழ்வரானோம்’ என்று எல்லோரையும் தன்னுடன் இணைத்துக் கொள்கின்ற அந்த சகோதரபான்மையோடு, நாங்கள் எல்லாம் தசரதனின் குழந்தைகள் என்று சொல்கின்ற பொழுது அனைவரையுமே தனது சகோதரர்களாக ஏற்றுக் கொண்டிருக்கின்ற அந்தப் பக்குவம்... அதுதான் திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் நாங்கள் முன்னிறுத்தி இருக்கின்றோம்.
அயோத்திக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் செல்வேன். நான் அனைத்து கோயிலுக்கும் செல்பவன்தான். அயோத்திக்கும் சென்று பார்க்கத்தான் வேண்டும். அயோத்தியில் இருப்பது பால ராமர்தான்.
எடப்பாடி பழனிசாமி உண்மையான குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதனால்தான், உண்மையான குற்றவாளி அவருக்கு தெரிந்திருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்தான், அவருக்கு குற்றவாளி தெரிந்திருந்தால் சொல்லட்டும் என்ற அடிப்படையில் நான் தெரிவித்திருந்தேன்.
உண்மையான குற்றவாளிகள் பிடிக்கப்படவில்லை என்று அவர் கூறுகிறார். நாங்கள் ஆதாரத்துடன் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை பிடித்துள்ளோம். வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளோம். இதற்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை சிபிசிஐடி இன்றும் புலனாய்வு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
என்னுடைய தகுதியை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு எந்த தகுதியும் கிடையாது. எனக்கு எல்லா தகுதியையும் எங்களுடைய தலைவர் முதலமைச்சர் தந்துள்ளார். அந்த தகுதி அடிப்படையில்தான் நான் பேசுகின்றனே தவிர என்னுடைய தகுதியை பற்றி கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அருகதையும் கிடையாது.
ஒன்றிய அரசு வேலையில் இருப்பவர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் பாஜகவிலும் சேர்ப்பார்கள். எதில் வேண்டுமானாலும் சேர்ப்பார்கள். ஏனென்றால் எல்லாமே அவர்கள் கையில் இருக்கிறது. இதற்கு மக்கள் நிச்சயம் ஒரு முடிவு கட்டுவார்கள்.
திமுக தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது என்பதற்கு ஒருங்கிணைப்பு குழு அமைத்தது ஒரு அடையாளமாக உள்ளது. இது கட்சியினரை உற்சாகப்படுத்துவதற்கும் ஒருங்கிணைப்பதற்காகவும்தான். எந்தவித பிளவும் வந்து விடக்கூடாது. இங்க இருக்கக்கூடிய அனைவரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்குள் எந்த சண்டை சச்சரவுகளும் போட்டி பொறாமைகளும் இல்லாமல் தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற 2026 இலக்கைக் குறிவைத்து தற்போது திமுக பாயத் தொடங்கிவிட்டது.
தேர்தலில் நாங்கள் தனி மெஜாரிட்டி பெறுவோம் தனியாக ஆட்சி அமைப்போம். எங்களது தோழமைக் கட்சிகளையும் அரவணைத்து செல்வோம். அவர்களுக்கு வேண்டியதை தருவோம்; வேண்டிய இடங்களை கொடுப்போம். எங்களைப் பொறுத்தவரை எங்களது தலைவரின் உழைப்புக்கு அவர் முதலமைச்சராக இருந்து ஆற்றி இருக்கக்கூடிய பணிகளுக்கு தனி மெஜாரிட்டி திமுகவுக்கு கிடைக்கும். யாருடைய தயவிலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழ்நிலை எங்களுக்கு ஏற்படாது.
நிச்சயமாக துணை முதல்வர் பதவி என்பது திமுகவில் இருக்கக்கூடிய அனைவருமே உதயநிதி ஸ்டாலினுக்குதான் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கையை தொடர்ந்து வைத்து வருகிறார்கள். கட்சி காரர்கள் தங்களது கோரிக்கைகளை சொல்வதில் எந்த தவறும் கிடையாது” என தெரிவித்தார்.