தமிழ்நாடு

“புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்கவில்லை” - ஆர்.பி.உதயகுமார் விளக்கம்

rajakannan

‘கஜா’ புயலில் சிக்கி ஒரு மீனவர் கூட உயிரிழக்காமல் பார்த்துக் கொள்ளப்பட்டதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

மேலும், “கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 4,987 மரங்கள் சாய்ந்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3,350 மரங்கள் சாய்ந்துள்ளன. விரிவான சேத அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமர், உள்துறை ‌‌அமைச்சரிடம் வழங்கப்படும். மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு பெறப்படும். கணக்கிடும் பணி முடிந்தபின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்” என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். 

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் முல்லைப்பெரியாறு, வராகநதி கரைகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்‌ளதாக தெரிவித்தார்.

மேலும், “கஜா புயல் பாதிப்பு தொடர்பாக மீட்பு மற்றும் நிவாரண பணியில் அரசின் அனைத்து துறைகளும் ஈடுபட்டுள்ளன. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். புயல், மழை பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து ஆட்‌சியர்களுடன் தொலைபேசியில் விவரங்கள் கேட்கப்பட்டன.

முல்லை பெரியாறு‌, வராக நதிக்கரைகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. முகாம்களில் உள்ளவர்களுக்கு சுகாதாரமான உணவு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆற்றங்கரைகளுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம்” என்றார் துணை முதல்வர்.

இதனிடையே, ‘கஜா’ புயலை சமாளிக்கும் வகையில் தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராட்டு தெரிவித்துள்ளன. தமிழக அரசின் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். 

மேலும் புயலால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை உடனடியாக மதிப்பிட, மத்திய அரசு குழுவை அனுப்ப வேண்டும் என்றும், சேதத்தை மதிப்பிட்டு பேரிடர் நிதியில் இருந்து மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘கஜா’ புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசு அமைத்துள்ள தற்காலிக நிவாரண முகாம்களில் 81 ஆயிரத்து 948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர், நாகை, ராமநாதபுரம், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் 471 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

நாகை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 102 நிவார‌ண மையங்களில் 11 ஆயிரத்து 306 குடும்பங்களை சேர்ந்த 44 ஆயிரத்து 87 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 109 முகாம்களில் 13 ஆயிரத்து 600 பேரும், திருவாரூரில் 160 நிவாரண முகாம்களில் 12 ஆயிரத்து 847 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சையில் 7 ஆயிரத்து 43‌ பேரும், புதுக்கோட்டையில் 2 ஆயித்து 432 பேரும், ராமநாதபுரத்தில் ஆயிரத்து 939 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.