தமிழ்நாடு

“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

“முதல்வராக விஜய் வேஷம் போட்டால் ரசிக்கலாம்.” - ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

webteam

நாட்டை நாங்கள் கவனமாக பார்த்துக்கொள்ளும்போது நடிகர்கள் அரசியலுக்கு வர நினைப்பது ஏன்? என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

‘சர்கார்’படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் “நான் முதலமைச்சர் ஆனால், நடிக்கமாட்டேன். உண்மையாக இருப்பேன். நேரம் வரும்போது ஒரு தலைவன் வருவான். அவன் தலைமையில் ஒரு சர்கார் அமையும். நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன். அது முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அதை கட்டாயம் ஒழிக்கதான் வேண்டும்” என்றெல்லாம் அரசியல் கலந்த வசனங்களை சூசகமாக பேசியிருந்தார். 

இந்நிலையில் விஜய்யின் பேச்சு தொடர்பான கேள்விக்கு பதலளித்த உதயகுமார், “கமல்ஹாசன் தூங்கிக்கொண்டே இருக்கிறார். திடீரென்று தூக்கம் கலைந்து எழுந்துவிடுகிறார். அவருக்கு பொழுதுபோகவில்லையே என்று, இந்த அரசு சரியில்லை. இந்த அரசு சரியாக செயல்படவில்லை என்கிறார். இந்த அரசின் ஒன்றரை வருட செயல்பாட்டை அவர்கள் திரும்பிப்பார்க்க வேண்டும். 18 மாதத்தில் 41 ஆயிரம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். மக்களுக்காக இந்த 18 மாதத்தை அர்ப்பணித்துள்ளோம். இதுவெல்லாம் கமல்ஹாசன் தூங்கிக்கொண்டிருந்ததால், அவருக்கு தெரியாது. ரஜினிகாந்திற்கும் இதுவெல்லாம் தெரியாது. விஜய்க்கும் இதுவெல்லாம் தெரியாது. யாருக்குமே தெரியாது. ஏனென்றால் அவர்களெல்லாம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தார்கள். தூங்கிக்கொண்டிருந்தார்கள்” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், “விஜய்யும் அரசியலில் குதிக்கலாம் என்று பார்க்கிறார். ஆனால் குதிக்கவே இல்லை. அவரது அப்பாவும் வலையெல்லாம் தயாராக விரிவித்து வைத்துக்கொண்டு, குதிப்பா நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். ஆனால் அவர் குதிக்க பயந்துகொண்டே இருக்கிறார். இப்ப அவருக்கு தையரியம் வந்திருந்தால், குதிக்கக்கட்டும். அடிபடாமல் தப்பிக்கொண்டால் அவர் சமத்துதான். யாராவது விஜய்யிடம் நாடு சரியில்லை. நீங்க நடிக்க போவாதீங்கனு சொன்னாங்களா? அவர் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் என்று சொல்கிறார். அவர் முதலமைச்சராக வேஷம் போட்டால் மக்கள் ரசிக்கலாம். ஆனால் முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல” என்றார்.