நாணய வெளியீட்டு நிகழ்வில்... pt web
தமிழ்நாடு

”இதற்கு ராஜ்நாத் சிங்கே பொருத்தமானவர்” - கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீடு!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

PT WEB

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உருவம் பொறித்த ரூ.100 நாணயத்தை மத்திய அமைச்சரான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

நாணய வெளியீட்டு விழாவில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் பங்கேற்றனர். திமுக கூட்டணிக் கட்சியினரில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஎம் மாநில செயலாளர் கே கோபாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

நாணய வெளியீட்டு நிகழ்வில் கருணாநிதி குறித்தான சிறப்பு காணொளியும் திரையிடப்பட்டது. பின்னர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். நாணயத்தில் தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, “கருணாநிதியின் நாணயம் வெளியிடப்பட்டதால் சொல்ல முடியாத மகிழ்ச்சியில் உள்ளேன். நா நயம் மிக்க தலைவரான கலைஞருக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது

கலைஞர் நாணயம் வெளியிட ஒத்துழைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. பல அரசியல் மாறுபாடு இருந்தாலும் நாணயம் வெளியிட்ட ராஜ்நாத் சிங்கே முதல் தேர்வாக இருந்தார். அனைத்து கட்சியினருடனும் நட்பு பாராட்டும் ராஜ்நாத் சிங் நாணயம் வெளியிட பொருத்தமானவர். இதுவரை நாம் கொண்டாடினோம்; இன்று இந்தியாவே கருணாநிதி விழாவை கொண்டாடுகிறது.

சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. மாநில உரிமைகளுக்காக போராடிய கருணாநிதி நெருக்கடி நேரங்களில் நாட்டிற்கு கைகொடுத்தார்” என்றார்.

பின்னர் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் கலைஞர் கருணாநிதியை புகழ்ந்து பேசினார்.